‘தி.மு.க.,- பா.ஜ.க, இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு, ‘பா.ஜ.க,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை. ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை’ என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
சென்னை திருவொற்றியூர் சட்டசபை உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘கருணாநிதி நூற்றாண்டு விழா போல, இந்தியாவில் வேறு எந்த விழாவும் நடக்கவில்லை. தி.மு.க.,வினரை விட ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்து பேசியுள்ளார். உள்ளத்தில் இருந்து உண்மையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
கருணாநிதி பற்றி அப்படி புகழ்ந்து பேச வேண்டுமென ராஜ்நாத் சிங்கிற்கு அவசியமே இல்லை. ராஜ்நாத் சிங் கருணாநிதியை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும் போது, ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். சோகம் இருந்தால் இரவு நேரத்தில் எனக்கு தூக்கம் வராது. நேற்று கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.
நிகழ்ச்சியை நடத்தியது தி.மு.க., அல்ல; மத்திய அரசு என்பதை கூட இ.பி.எஸ்., புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் நாணயம் வெளியிட்டு விழாவில் இ.பி.எஸ்.,ஐ அழைக்கவில்லை. எம்.ஜி.ஆர்., நாணய வெளியிட்டின் போது இ.பி.எஸ்.,ஐ மத்திய அரசு மதிக்கவில்லை. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் அவருக்காக இரங்கல் கூட்டம் நடத்தியுள்ளார்களா?
பா.ஜ.க,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை. இ.பி.எஸ்., மாதிரி ஊர்ந்து சென்று பதவி வாங்கும் அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தி.மு.க., எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும்’’ இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.