தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் உதயநிதி யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்ட கேள்விக்கு, ‘உதயநிதியிடம்தான் மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என பதிலளித்திருக்கிறார்.
அடுத்தது, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என சென்று கொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்தவுள்ளார். அப்போது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் விஜயக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய அவர், ‘‘பெண்கள் எதற்கும் பயப்படாதீர்கள், அச்சமின்றி முன்னேறுங்கள் அடையக்கூடிய இலக்கை நிச்சயம் அடைவீர்கள்’’ என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கனிமொழியிடம் அரசியல் பிரபலங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தார்.
2026ஆம் ஆண்டு என்ற கேள்விக்கு ‘‘திமுகவின் சட்டமன்ற தேர்தல் வெற்றி’’ என பதில் அளித்தார். அடுத்ததாக பண்பு என்ற தலைப்பில் ஜெயலலிதா பற்றி பேசியவர், எதற்கும் அஞ்சாத ஒரு பண்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு இருந்தது அதை என்றும் பாராட்டுவேன் என தெரிவித்தார்.
பாசம் (மு.க.ஸ்டாலின்) என்ற தலைப்பில் பேசியவர், ‘‘முதலமைச்சர் என்பதை எல்லாம் தாண்டி பாசமான அண்ணன்’’ என குறிப்பிட்டார். பாராட்டு ( மோடி ) என்ற தலைப்பில் பேசியவர், ‘‘குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தந்து விட்டால் நான் பிரதமர் மோடியை மனதார பாராட்டுவேன்’’ என தெரிவித்தார்.
தொடர்ந்து அடுத்த கேள்வியான அரசியலில் உதயநிதி யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு, ‘‘உதயநிதியிடம் தான் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.
அறிவுரை – விஜய் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘சின்ன வயதில் இருந்தே விஜய் குடும்பத்துடன் எனக்கு பழக்கம் உள்ளது. விஜய்யிடம் சிறந்த தெளிவும்,கடின உழைப்பும் இருந்ததால் தான் திரைத்துறையில் எல்லோரும் கொண்டாட கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய இடத்தை அடைந்துள்ளார். அதே தெளிவுடனும், உழைப்புடனும் அரசியலிலும் பயணிக்க வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கும்’’ என கனிமொழி தெரிவித்தார்.