ஆகஸ்ட் 19க்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதாக ராஜகண்ணப்பன் வைத்த ட்விஸ்ட்தான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான செல்வாக்கு உள்ள தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். திமுக இளைஞரணி பொதுச்செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இருக்கிறார். கட்சியில் மட்டுமல்ல ஆட்சியிலுமே முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமல்ல, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இது கிட்டத்தட்ட முதல்வரை போல் எல்லா துறைகளிலும் சம்பந்தப்பட்ட முக்கியமான துறையாகும். அதே நேரம் இதுவரை துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது ஆறு மாதம் முன்பே துணை முதல்வராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று திமுகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆறு மாதம் முன்பு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பெரிய தலைவராக உதயநிதியை புகழ்ந்தார்கள். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக ஆதங்கங்களை அப்போது வெளிப்படுத்தினார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படும் முற்றிலும் வதந்தி என்று சேலம் மாநாட்டிற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் திமுக வென்றது. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வென்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள திமுகவினர், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘உதயநிதி ஸ்டாலின் துணைமுதலமைச்சர் ஆவதாக கோரிக்கைகள் வலுக்கிறதே?’ என கேட்டதற்கு, ‘கோரிக்கைகள் வலுக்கிறதே தவிர, பழுக்கவில்லை..!’ என கலைஞர் பாணியில் பதிலளித்தார் ஸ்டாலின்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வர் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி என குறிப்பிட்ட நிலையில், திடீரென சுதாரிர்த்துக் கொண்டு “ சாரி சாரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என பேசியதோடு, ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு அப்பறம் தான் அப்படி சொல்ல வேண்டுமென பேசினார்.

இதனால் ஆகஸ்ட் 19க்கு முன்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம், அல்லது அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறுகின்றனர் திமுகவினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal