2026ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. திட்டம் தீட்டி வருகிறது. அப்போதுதான் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது உறுதி என ஸ்டாலின் கூறி வருகிறாராம். தி.மு.க.வினரும், ‘அடுத்து ஆட்சி அமைப்பது நாம்தான்’ என உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.
தி.மு.க.வின் இந்த உற்சாகத்திற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள். அ.தி.மு.க.வில் யாரையும் இணைக்கமாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதுதான் தி.மு.க.வின் உத்வேகத்திற்கும் காரணம்.
மறைந்த முதல்வர் ஜெயலிதா இருக்கும் போது, அவர் தேர்தல் பிரச்சாரங்களில் சில கருத்துள்ள குட்டிக் கதைகளை சொல்லுவார். அந்தக் குட்டிக் கதைகளுக்கு சொந்தக்காரர் மருது அழகுராஜ்தான். கருணாநிதிக்கு ‘தீய சக்தி’ என்ற பெயரை வைத்து, தொடர்ந்து நமது எம்.ஜி.ஆரில் விமர்சித்து வந்தவரும் அழகுராஜ்தான். அவர் இன்றைக்கு வேதனையுடன் வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவினை போட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், ‘‘ # ஒருபுறம்வேடன்
மறுபுறம்நாகம்…
‘எல்லோரும் ஒன்றாகி கட்சி உயிர் பிழைத்து விடாதா’ என நம்பிக் காத்திருக்கும் அப்பாவித் தொண்டர்கள் ஒருபுறம்…
வெற்றிக்கு வழி காட்டும் தலைமைத் தகுதி இல்லாவிட்டாலும் கோட்டை முதல் கொடநாடு வரை நாலரை வருடங்கள் தூரு வாரிய பணமெல்லாம் கொட்டிக் கிடப்பது எடப்பாடியிடம் என்பதால் அந்த பதரை கட்டி அழும் இத்துப் போன நிர்வாகிகள் கூட்டம் இன்னொரு புறம்..
இவற்றுக் கிடையில் கவனிப்பாறின்றி கிடக்கும் மான் குட்டியின் ‘தலைக்கறி உனக்கு தொடைக் கறி எனக்கு’ என பங்கு பிரித்துக் கொள்ளும் கனவிலும் ஆர்வத்திலும் திமுக பாஜக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள்..
இவற்றுக்கு மத்தியில் உணர்ச்சி அற்ற தொண்டர்கள் வேடிக்கை பார்க்க ஊசலாடிக் கொண்டிருக்கிறது புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் போராடி வளர்த்த பொன் விழா கண்ட இயக்கம்…
என்ன நாஞ் சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் எதிர்காலம் கருதியும், கோடிக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வாரா எடப்பாடி பழனிசாமி..?