உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன், காட்பாடி வட்டம் பொன்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளர்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனும் அவருடன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்போவதாக பல இடங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். உதயநிதி முறையாக வளர்ந்தவர். கட்சியின் சட்டங்களுக்கு உட்பட்டவர்.
நான் 60 ஆண்டுகளை கட்சிக்காகவே அர்ப்பணித்தவன். எனதுவளர்ச்சி, எனது குடும்பத்தைவிட, கட்சியையே பெரிதாக கருதுபவன்.எனவே, கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
மழைக்காலம் நெருங்குவதையொட்டி, சென்னையை சுற்றிஉள்ள நீர்நிலைகளைச் சீரமைத்துள்ளோம். நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முயற்சித்து வருகிறோம். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.