விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அமைச்சர்கள் கவனிப்புகளில் தாராளமும், ஏராளமும் காட்டி வருவதைப் பார்த்து, ‘விக்கிரவாண்டியைப் போல் நமக்கு இடைத்தேர்தல் வராதா?’ என பக்கத்து தொகுதி மக்களை ஏங்க வைத்துவிட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.

“திமுக சார்பில் 25 அமைச்சர்கள் இங்கு தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா 6 ஊராட்சிகள் வீதம் ஒதுக்கப்பட்டு இவர்களுக்குக் கீழ் பணி செய்யும் எம்எல் ஏ-க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்காளர்கள் ‘கவனிக்கப்பட்டு’ வருகிறார்கள். 7-ம் தேதி நிலவரப்படி வாக்காளர்களுக்கு 3 தவணைகளாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்குள் மேலும் இரண்டு தவணைக்கான பரிசுகள் வழங்கப்பட்டுவிடும்” என்கிறார்கள் உள்ளூர் அரசியல் நிலவரம் அறிந்தவர்கள். வெளியூரில் வசிக்கும் வாக்களர்களை பயணச் செலவுக்கு பணம் கொடுத்து வாக்களிக்க அழைத்து வரவும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.

பட்டிலின மக்கள் வசிக்கும் பகுதியில் 100 சதவீதமும், மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் 80 சதவீத ‘கவனிப்பு’கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். திமுகவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருவை அல்லது பகுதியைச் சேர்ந்த மக்கள் வாக்களித்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து அதை வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றம் செய்யும்படி பக்கா ஸ்கெட்ச் போட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

பாமக சார்பில் அன்புமணி ராமதாஸின் பிரச்சாரமும், வழக்கறிஞர் பாலுவின் தேர்தல் வியூகங்களும் திமுகவினரை அசந்து மறந்து இருக்கவிடவில்லை. தினமும் கிராமப் பெண்களிடம், பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டது. திமுக பிரச்சாரக் கூட்டங்கள் நடந்தபோது தவறவிட்ட சீரியல்களை காண மொபைல் செயலிக்கு ஒரு மாத சந்தாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் கிராமத்துப் பெண்களிடம் சுட்டிக் காட்டும் பாமக, “திமுக இப்போது அளித்துவரும் சலுகைகள் எல்லாம் தொடருமான்னு யோசிச்சுப் பாருங்க. கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம், மகளிருக்கு இரு சக்கர வாகனத்திற்கு மானியம் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்து அரசு தற்போதுள்ள திட்டங்களை தொடரும் என்பதற்கு உத்திரவாதமில்லை.

நாங்கள் மீனை கொடுக்கவில்லை. மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கிறோம். ஏதோ எங்களால் முடிந்தது. திமுகவினர் 3 தவணை கொடுத்தது போல நாங்கள் கொடுக்க முடியாது. ஏதோ எங்களால் முடிந்தது” என கூறி ஒரு தவணை ‘கவனிப்பை’ நடத்தியதாகவும் சொல்கிறார்கள். பாமகவினர் அதிமுக, தேமுதிக நிர்வாகிகளை உடன் வைத்துக் கொண்டே வாக்காளர்களைச் சந்தித்து வந்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் திமுகவை சகட்டுமேனிக்கு விமர்சித்தபடி முதல் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து வாக்கு சேகரித்தனர். மாநில அங்கீகாரம் பெற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சீமான் தினமும் தேர்தல் களத்தில் கூடுதல் உற்சாகத்துடன் நின்றார். தினமும் மாலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் தனது வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்தார்.

இப்படி மூன்று அணிகளும் சுழன்றடித்து வரும் நிலையில், இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. பிரச்சாரம் ஓய்விற்குப் பிறகும் ‘கவனிப்பு’ ஏராளமாகவும், தாராளமாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இறுதிக்கட்ட நிலவரப்படி மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்குகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal