ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருக்கிறது என அரசியல் கட்சியினர் கூறிய நிலையில், “ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உடனடியாக தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், வடக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், ஆகியோர் அயனாவரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய அஸ்ரா கார்க், ‘‘ஆம்ஸ்டர்டாங் கொலை வழக்கில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. 4 மணிநேரத்தில் 8 சந்தேகப்படும் நபர்களை கைது செய்துள்ளோம். 3 இருசக்கர வாகனங்கள் 7 அரிவாள்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் 3 நபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளோம். 10 தனிப்படைகள் தீவிரமாக தேடியதால் அவர்களாகவே சரண் அடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தான் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை.” என அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
அஸ்ரா கார்க்கைப் பொறுத்தளவில் உண்மை குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிப்பதில் அதிரடி வேகம் காட்டக் கூடியவர். காவல்துறையில் சரண்டரானவர்கள் உண்மை குற்றாவளிகள் இல்லை என தொல் திருமாவளவன் போன்றவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், அஸ்ரா கார்க் போன்ற நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து உண்மை குற்றவாளிகள் ஒரு போதும் தப்பிக்க முடியாது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்திலேயே!
அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறுகின்றனர். டெல்லி அருகே குர்கானில் உள்ள தனியார் பள்ளி கழிவறையில் 2017ம் ஆண்டு 7 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தலைநகரையே உலுக்கியது. இது தொடர்பாக ஹரியானா போலீசார் பள்ளி பேருந்து நடத்துனர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அப்போது சிபிஐயில் இருந்த அஸ்ரா கார்க் சிறப்பு குற்றப் பிரிவை கண்காணித்தார். இந்த விவகாரத்தில் அஸ்ரா கார்க் புலனாய்வு செய்து, பள்ளிப் பேருந்து நடத்துநர் குற்றவாளி இல்லை கண்டறிந்தார். அதன் பிறகு உண்மையான குற்றவாளியையும் கைது செய்தார்.
எனவே, ஏழு வயது மாணவன் கொலையில் குற்றவாளிக்கு தண்டனையும், நிரபராதியை பாதிக்கப்படாத வகையிலும் வழக்கை நடத்தினார். எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் அஸ்ரா கார்க்கின் கண் பார்வையில் இருந்து தப்பவே முடியாது என்கிறார்கள், அஸ்ரா கர்க்கைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்!