நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா கடிதம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக மாமன்ற கூட்டம் ஏற்றுக் கொண்டது. மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவி விலகல் கடிதம் இன்று (ஜூலை 8) மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த கடிதம் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு கடிதத்தின் மீது ஒப்புதல் பெறப்படும் நடவடிக்கைக்காக மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் இன்று நடைபெற்றது.
சரியாக 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் மாநகராட்சி துணை மேயர் மற்றும் ஆணையாளர் மற்றும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பதவி விலகல் கடிதம் மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடுவதாக கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் மேஜையை தட்டி அதற்கு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லை தி.மு.க.வில் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து நடுநிலையான உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில்லை நெல்லை தி.மு.க.வில்தான் கோஷ்டிப் பூசலும், உள்ளடிவேலைகளும் அதிகம் நடக்கிறது. நெல்லையில் கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. காரணம், தலைமைக்கு தவறான தகவல்களை கொடுத்து, கட்சிக்கு துரோகம் செய்பவர்களே பதவியில் நீடித்து வருகின்றனர்.
இதனால், நெல்லையில் தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகிறது. எனவே, தி.மு.க. தலைமை கலைஞர் காலத்தில் நெல்லை தி.மு.க. எப்படி செயல்பட்டதோ, அந்தளவிற்கு செயல்படவேண்டும். அதற்கு ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும்’’என்றனர்.