100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் கரூரில் 10 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

கரூரில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார்கள் என எண்ணிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் விஜயபாஸ்கர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எனவே எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாக விஜயபாஸ்கர் தலைமறைவானார் எங்கே இருக்கிறார் என்று தகவல் தெரியாமல் போலீசார் திணறினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் இடைக்கால ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவையும் நேற்று இரவு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எனவே எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படும் சூழ்நிலையில் இன்று அதிகாலை முதல் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, பார்த்த இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேல் கொண்டு வருகின்றனர். கரூர் – கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு,திரு வி கா சாலையில் உள்ள எம்ஆர்பி டிரஸ்ட் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் காத்திருப்பு, கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகம்,ராமானுஜ நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனையை தொடங்கியுள்ளனர்.

தவிர சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. சிபிசிஐடி போலீசார் சல்லடை போட்டுத் தேடி வருவதால் சரண்டராவாரா..? அல்லது போலீசாரால் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal