விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பாமகவிற்கு இழுக்க அன்புமணி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான அண்ணாமலையின் பேச்சால் அதிமுக வாக்குகள் நாம் தமிழருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பா.ம.க. & பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் விழ தொடங்கியிருக்கிறது.

உட்கட்சி மோதல் காரணமாக ஏற்பட்ட போட்டியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் டிடிவி சட்ட போராட்டம் நடத்தினர். இறுதியில் அதிமுகவிற்கு எதிராகவே தேர்தல் களத்தில் பாஜகவுடன் இணைந்து மோதிக்கொண்டனர். இந்த சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது. திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

எனவே விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவினரின் ஓட்டுக்களை கவர்வதற்காக நாம் தமிழர் கட்சி இபிஎஸ் நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதே போல எடப்பாடி பழனிசாமியும் சீமானுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே இதனை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெற்றுவிடலாம் என பல வித தேர்தல் கணக்கானது நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தியும், அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பொது எதிரி திமுக தான் எனவே அதிமுகவினர் பாமகவை ஆதரிக்க வேண்டும் எனவும் அன்புமணி கூறியிருந்தார். மேலும் அதிமுகவை விமர்சிக்காமல் அன்புமணி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் தான் அன்புமணிக்கு மட்டுமில்லாமல் பாமகவினருக்கே ஷாக் கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மோசமாக விமர்சித்தது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை துரோகி, அதிமுக அழிகிறது. எடப்பாடிக்கு அருகதை இல்லை போன்ற வார்த்தைகளால் அதிமுக நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவிற்கு வாக்களிக்கலாமா என ஒரு சில அதிமுகவினர் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அண்ணாமலையின் இந்த பேச்சால் பாமகவிற்கு செல்லக்கூடிய வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் பிரச்சார கூட்டத்தில் பாஜகவினர் பாமகவினரை தாக்கிய சம்பவமும் கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை பேச்சு, பாஜகவினரின் தாக்குதல் சம்பவத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போதைய நிலையில் பாஜக கூட்டணியில் முறிவுக்கான ஆரம்ப புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாமகவினர் தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal