‘எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி ஒன்றும் அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல’ என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விமர்சித்தவர், ‘விரைவில் சசிகலாவை சந்திக்க இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசியதாக முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கோவை ஜேஎம்எண் 1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கேசி பழனிசாமி நீதிமன்றம் வந்திருந்தார். வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் காரணத்தால், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவை நீதிமன்ற வளாகத்தில் கே.சி.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை, 2014ல் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்று கூறி எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அடைகிறார். அதிமுகவின் வாக்குகள் திமுகவிற்கு சென்றிருக்கிறது. கோவையிலும் வாக்கு சதவீதமும் குறைந்திருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற்ற அதிமுக, இந்த தேர்தலில் 3வது இடத்திற்கு எப்படி சென்றது என்பது குறித்து சிந்தித்திருக்க வேண்டும். எப்படி கோவையில் 2 லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது என்பதை பரிசீலித்து, கட்சியை பலப்படுத்துகிற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மாறாக அண்ணாமலைக்கு வாக்கு குறைந்துள்ளது என்று வெளிப்படுத்துகிற கருத்து திமுகவின் வெற்றியில் ஆறுதல் அடைவதாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இன்னும் கிளைச் செயலாளர் அளவிலேயே செயல்படுகிறார். யாரையும் அரவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுகிறார்.
அதிமுக தலைமைக்கு அவர் தகுதியற்றவர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். அதிமுகவின் வாக்குகள் இப்போது திமுகவிற்கு சென்று கொண்டிருக்கிறது. சசிகலா ஜானகி ராமச்சந்திரன் போல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “எதிரியாக இருந்தாலும் அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் வகையில் இயக்கத்தில் இணைபவரை வரவேற்பது தான் அரசியல். எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு கட்சி ஒன்றும் அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அதிமுக தொண்டர்களின் சொத்து. எடப்பாடி பழனிசாமி அரசியல் அறியாமையில் பேசுகிறார். ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, முதல்கட்டமாக சசிகலாவைச் சந்திக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.