சென்னையை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 8 பேர் கைதாகியிருக்கிறார்கள். கொலைக்கான காரணமாக கூறப்படுவதை தற்போது பார்க்கலாம்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையால் கடும் கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தி வருகிறார். அந்த கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி உள்ளார். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். இவருக்கு வயது 52.
இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலையில் அவர் தனது வீட்டின் அருகே வழக்கம்போல் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் பைக்குகளில் ஜோமோட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. ஆம்ஸ்ட்ராங்கை மீட்க முயன்ற நண்பர்களிடம் அரிவாளை காட்டி அந்த கும்பல் மிரட்டியது. இதனால் அவர்களால் ஆம்ஸ்ட்ராங் அருகே நெருங்க முடியவில்லை.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிய கும்பல் அங்கிருந்து பைக்குகளில் ஏறி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ட்ராங் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் சென்னையை பொறுத்தவரை தலித் தலைவராக அறியப்படுகிறார். அதோடு இவர் முன்னாள் கவுன்சிலரும் கூட. இவருக்கு பெரம்பூர் பகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இதனால் அவரது கொலையை கண்டித்து நேற்று இரவே சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் சென்னையில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பிறகு அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் தொடர்ந்து ஆதரவாளர்கள், கட்சியினர் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்ற பிறகு மர்மகும்பல் பைக்குகளில் வேகமாக செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் அவர்களை தேடிவந்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே தான் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துள்ளதாக 8 பேர் நேற்று சென்னை அண்ணாநகர் போலீசில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து சென்னை அண்ணாநகர் போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் பொன்னை பாலு (வயது 39), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), திருமலை (45),அருள் (33), ராமு (38), சந்தோஷ், செல்வராஜ் (48) என்பது தெரியவந்தது. இதில் பொன்னை பாலு என்பவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியாவார். இவர் தலைமையில் தான் கொலை நடந்துள்ளது.
இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது ரவுடி ஆற்காடு சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆற்காடு சுரேஷ் தரப்பு நம்புகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க அவர்கள் திட்டமிட்டனர்.இந்நிலையில் தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்றோம் என்று அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராஸ் படுகொலையால் சென்னையில் ஒருவித பதற்றம் காணப்படுகிறது.