முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய தமிழினியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில், தன்மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட இருப்பதை உணர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தலைமறைவானார்கள்.

இதற்கிடையில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். 3 முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 25-ஆம் தேதி முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் மீது மீது 6 பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழினியன் (29) என்ற இளைஞர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழினியனை தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal