தமிழ்நாட்டில் மணல் குவாரி விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் அமலாக்கத்துறை, அந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளது. மறுபுறம் வருமானவரித் துறையும் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளிடம் வருமான வரித்துறையும் விசாரிக்க போகிறதாம்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் பரபரப்புக்கு நடுவில் மெதுவாக இருந்த வருமான வரித்துறை வழக்குகள் மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையை தொடர்ந்து வருமான வரித்துறையும் மணல் குவாரி வழக்குகளை விசாரிக்க போகிறதாம்.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்து இருந்த அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றத்துக்கான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த விவகாரத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் 3 பேர், நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் 28 மணல் குவாரிகள் என 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரெய்டு நடத்தினார்கள். இந்த அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான ரூ,130 கோடி சொத்துகள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த ரூ.2.25 கோடி பணம் ஆகியவை அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக மணல் குவாரிகள் அமைந்துள்ள வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களையும் விசாரணைக்காக ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் , குறிபபிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
சம்மன்களுக்கு பதிலளிக்கவும், புலனாய்வு அமைப்புகளால் தொடங்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.