பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்த அளவுக்கு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ அன்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வந்தே மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது. நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை w வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. உற்பத்தியின் மையங்களாக வடகிழக்கு மாநிலங்கள் மாற உள்ளது. மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டசபை, பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 3-வது ஆட்சிக்காலத்தில் மேலும் 3 கோடி இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.