நில அபகரிப்பு புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் எஸ்பி அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், ‘தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததார்’ என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிறகு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இதனால், விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று( ஜூன் 24) இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.