மக்களவை சாபாநாயகர் பதவிக்கான தேர்தல் 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று நடைபெறுகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் 4-வது முறையாக லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரிப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
18-வது லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் நேரம் முடிவடைவதற்கு முன்னதாக திடீரென எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்கவில்லை. இதனால் புதிய சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 8 முறை எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். “இந்தியா” கூட்டணி தலைவர்களுடன் சென்று கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக்சபா சபாநாயகர் தேர்தல் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாடு விடுதலை அடைந்த பின்னர் 4-வது முறையாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ வேட்பாளர் யார் என்பது குறித்தோ தங்களிடம் ஆலோசிக்கவே இல்லை; காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவு என திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்திருக்கிறார். இதனால் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் 29 பேரும் ஆதரித்து வாக்களிப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் புதிய திருப்பமாக, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 4 எம்பிக்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆந்திராவில் ஜெகன் மோகனை படுதோல்வி அடையச் செய்த பாஜக கூட்டணிக்கே அவரது கட்சி எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்க இருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.