தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 61 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய தினம் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.விற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று கவர்னர் டெல்லி சென்றிருப்பது, தி.மு.க.விற்கு திடீர் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக வார்த்தை மோதல் இருந்து வருகிறது. பொது மேடைகளில் ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கருத்துகளை விமர்சனம் செய்வதையும், சனாதன கருத்துகளை உயர்வாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் நீண்ட காலமாக ஆளுநர் ஆர்என் மற்றும் தமிழக அரசுக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 140க்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் பலியானதற்கு பொறுப்பேற்று உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக, பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதோடு மாநிலம் முழுவதும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். இதுமட்டுமின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பற்றி புகாரளித்தனர்.

அதேபோல் நேற்றைய தினம் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தலைவர்கள் ஆளுநர் மாளிகை சென்று ஆர்என் ரவியை சந்தித்து புகாரளித்தனர். இத்தகைய சூழலில் தான் இன்று காலையில் தனது உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

டெல்லிக்கு அவர் ஒருநாள் பயணமாக புறப்பட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் டெல்லி சென்றடையும் ஆளுநர் ஆர்என் ரவி அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலி ஏற்பட்டது தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கள்ளச்சாராய பலி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இன்றைய பயணத்தின்போது அதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவியின் இன்றைய டெல்லி பயணம் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரது இந்த பயணத்தை திமுகவினர் உற்று கவனிக்க தொடங்கி உள்ளனர்.

தவிர, மதுபான முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேற்று சி.பி.ஐ. போலீசார் கைது செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal