கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ரவியை சந்தித்தனர். கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: ‘‘கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியான கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இது 2வது சம்பவம். ஏற்கனவே மரக்காணம், செங்கல்பட்டில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர். அப்போது இனி தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு இருக்காது எனக் கூறினர். ஆனால் கள்ளக்குறிச்சி மரணம் மோசமானது. கள்ளச்சாராயம் காய்ச்சிய பகுதிக்கும் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும் வெறும் 300 மீட்டர் தான் இடைவெளி. நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் என எல்லாம் அருகில் இருந்தும் கள்ளச்சாராய நிகழ்வு நடந்தேறியுள்ளது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் சொன்னதால், மீண்டும் பலர் குடித்தனர். இதனால் பாதிப்பு அதிகரித்தது. ஒரு நபர் கமிஷன் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம். ஏற்கனவே செங்கல்பட்டு, மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை பலனளிக்கவில்லை. கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சியினருக்கு தொடர்புள்ளது. வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துதான் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுள்ளது. வனத்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனை குறித்து உளவுத்துறை தகவல் தராதது ஏன்? மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார், சிபிசிஐடி விசாரித்தால் நியாயம் கிடைக்காது; சிபிஐ விசாரிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.