கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதுரையில் வெறும் சம்பிரதாயத்திற்கு ஆர்ப்பாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அ.தி.மு.க.சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சில நிமிடங்களில் சம்பிரதாயத்திற்காக நடந்து முடிந்ததாக உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி தூங்கா நகரில் உள்ள உண்மையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளே ஆளும் தரப்பை எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கள்ளச்சாராய பலி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும்’ என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சென்று நேரில் ஆறுதல் கூறியதோடு, ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். ஒரு சில மாவட்டங்களில் தி.மு.க.விற்கு எதிரான ஆர்ப்பாட்டம் சக்ஸஸ் ஆகியிருந்தாலும், மதுரையைப் பொறுத்தளவில் ஃபெயிலியர் என்கிறார்கள்.
காரணம், இங்குள்ள மா.செ.க்கள் தி.மு.க. அமைச்சர்களுடன் மறைமுகமாக தொடர்பில் இருந்துக் கொண்டு, சொந்தக் கட்சிக்கே சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை நிலவரத்தை எடப்பாடி பழனிசாமி ஆராயந்து, சம்பந்தப்பட்ட மா.செ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அரியணையில் அமரும். இல்லாவிட்டால் அக்கட்சிக்கு எதிர்காலமே இருக்காது’’ என்றனர் சோகத்துடன்.
‘நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் எனக்கு ஒரு நல்ல படிப்பினையை கொடுத்துவிட்டது’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டிருக்காமல், கட்சி ரீதியாக சில மாற்றங்களை கொண்டுவந்து, உண்மையானவர்களுக்கு மா.செ. பதவி கொடுத்தால்தான் கட்சி வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் என்பதுதான் நிதர்சனம்..!
அ.தி.மு.க.வில் உள்ள அடிட்ட தொண்டர்களின் கொந்தளிப்பையும் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான சீனியர் நிர்வாகிகள் சிலர்..!