தமிழக சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.,க்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.
அவை நடவடிக்கைக்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் நேரு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை முதல்வர் ஸ்டாலின் வழிமொழிந்தபோது கூட்டத்தொடர் முழுவதும் என்பதில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில்:
‘‘கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய பலி தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்னளர். இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவு, எதிர்கால பிரச்னைகளை அரசே ஏற்று கொண்டுள்ளது. கலெக்டர், எஸ்.பி., நீக்கப்பட்டுள்ளனர். மது பிரிவு ஏடிஜிபி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய பலி தொடர்பாக தீவிரமாக விசாரிக்கபட்டு வரும்போது எதிர்க்கட்சி தலைவர் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறார். ஆர்பாட்டம் நடத்துகின்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. முன்னாள் முதல்வர் மீது சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என திமுக வலியுறுத்தியது. இதனை கோர்ட்டும் சொன்னபோது அவர் ஏற்கவில்லை. அந்த விசாரணைக்கு தடை உத்தரவு வாங்கிய வீராதிவீரர் தான் இவர். அப்படிப்பட்டவர் இன்று சிபிஐ விசாரணை வேண்டும் என பேசுகிறார். ஆகையால் சிபிஐ விசாரணை குறித்து சபாநாயகரே முடிவு செய்யலாம்’’ இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கள்ளச்சாராய பலி குறித்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்காதது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.