‘அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில், 2019 அக்டோபரில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தியது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், போராட்டக் களத்திற்கு நேரில் வந்து அவர்களுடன் தரையில் அமர்ந்து, “அரசு மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று உறுதி அளித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் – அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் – நன்னடத்தைச் சான்றிதழில் கை வைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை! மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்” என கூறியிருந்தார்.

ஆனால், 2021 மே 7-ம் தேதி திமுக ஆட்சிக்கு வந்ததும், 2019-ல் அவர் என்ன வாக்குறுதி அளித்தாரோ அதில் ஒன்றைக்கூட செய்யவில்லை. அன்று எதை ‘கொடுங்கோன்மை’ என்று சொன்னாரோ, அதை திமுக ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். தங்கள் உரிமைகளுக்காக போராடும் அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து, அவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

அரசு மருத்துவர்கள் சிறப்பாக செயல்படுவதால் தான், சுகாதாரத் துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது. சுகாதாரத் துறையில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியை தங்களின் சாதனை என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, அதற்கு காரணமான அரசு மருத்துவர்களை பழிவாங்கி வருகிறது. அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறது. திமுக அரசை முதல்வர் மு க ஸ்டாலினை பெரிதும் நம்பிய அரசு மருத்துவர்களுக்கு பெரும் துரோகத்தை திமுக செய்து வருகிறது.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.

எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை படிப்பு என நீண்ட காலம் தங்களை வருத்திக்கொண்டு படிப்பதோடு, பயிற்சி டாக்டராக தங்கள் பணியை துவக்கி, அரசு பணியில் சேர்ந்து நிர்வாக ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு தர அரசு மறுப்பது அநீதி.
மேலும் மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழக டாக்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக வழங்கப்பட்டும் தங்கள் பணியை பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

அரசு மருத்துவர்கள் மன நிம்மதியுடன் இருந்தால் தான் நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். அரசு மருத்துவர்களை மன உளைச்சலுடன் போராடும் அளவுக்கு தள்ளினால், சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை கொரோனா காலத்தில் சேவை செய்து உயிரிழந்த தமிழகத்தின் 11 மருத்துவர்களுக்கு அரசு சார்பாக எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அந்த 11 மருத்துவர்களுக்கும் தமிழக அரசு தல 50 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொரோனா சேவையில் உயிரிழந்த கபள்ளிப்பட்டுமருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய மனைவி திவ்யா தமிழக அரசிடம் விண்ணப்பித்து இன்று வரை வேலை வழங்கப்படவில்லை.

கருணை அடிப்படையில் கோவிட்டால் உயிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலைவழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.

அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையை மேலும் தாமதப்படுத்தி மற்ற அரசு ஊழியர் சங்கங்களை போல், மருத்துவர்களையும் போராட்டத்திற்கு தூண்டாமல் நடப்பு சட்டமன்ற தொடரிலேயே மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal