மக்களவையில் 18வது சபாநாயகராக பா.ஜ.க,வின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வாக இருக்கிறார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி, 3வது முறையாக பிரதமரானார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முட்டி மோதின. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்றைய (ஜூன் 24) முதல்நாள் கூட்ட அமர்வில், அனைத்து எம்.பி.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 17வது லோக்சபாவின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இன்று பிரதமர் மோடியை சந்தித்த ஓம் பிர்லா சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று, அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal