‘எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?’ என காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேச்சால் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:

‘‘தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.

அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். எந்த திசையில் செல்ல போகிறோம் என்பதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குற்றம் அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு உண்மை, உழைப்பு, ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு 20 சதவீத ஓட்டுகளை பெற்றோம். கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் கால்தடம் இல்லாத கிராமங்களே இல்லாத அளவிற்கு யாத்திரை நடத்தப்படும்’’ இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சால் கூட்டணியில் உள்ள திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal