அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மா.செ.வுமான செல்லூர் ராஜு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின் போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளது புரியாத புதிராக உள்ளது. அதிமுக தலைமை இண்டியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிற நிலையில், செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்தியை பாராட்டியிருப்பது கேள்வியை எழுப்பியதோடு சர்ச்சையையும் கிளப்பியது.

இந்த நிலையில்தான மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் செல்லூர் ராஜு தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி இருவரும் உருவாக்கி வளர்த்த இயக்கம். விழுந்தாலும் எழும் பீனிக்ஸ் பறவை போல்!!!’’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. அதாவது, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு வளர்த்த இயக்கத்தை ஜெயலலிதா கட்டிக்காத்து வந்ததர். அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக நடத்தினார். மூன்றாவது முறை வலுவான எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதைப் பற்றி செல்லூர் ராஜு எதையும் பதிவிடாமல் இருப்பதுதான் உள்ளுக்குள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

அ.தி.மு.க.வில் இருந்துகொண்டே செல்லூர் ராஜு தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களுடன் மறைமுகமாக உறவாடிக் கொண்டிருக்கிறார் என தொடர்ச்சியாக மதுரை ரத்தத்தின் ரத்தங்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட, அவருக்கு நெருக்கமானவர்கள் முழுமனதோடு கட்சி வேலை பார்க்கவில்லையாம். காரணம் செல்லூர் ராஜூ கண் சிமிட்டியதால்தான் என்கிறார்களாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெறும் எனக் கூறியிருந்த நிலையிலும், அங்கு தோல்வியடைய காரணம் தி.மு.க. அமைச்சர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்கள் மறைமுகமாக கைகோர்த்ததுதான் என்கிறார்கன் ரத்தத்தின் ரத்தங்கள். அந்தந்த மா.செ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்கிறார்கள்.

இதற்கிடையே, செல்லூர் ராஜூவைப் பொறுத்தளவில் வெளியில் ‘காமெடிக்காரராக’ தெரிந்தாலும், உள்ளுக்குள் அமைதிப்படை சத்தியராஜ் ரேஞ்சுக்கு ‘அரசியல்’ செய்வார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்களே! எனவே, திருச்சி, மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மா.செ.க்களை மாற்றினால்தான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் கோட்டையில் அமர முடியும் என்கிறார்கள் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள்..!

அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக ராகுலுக்கு ஆதரவாகவும், தி.மு.க. அமைச்சர்களிடம் மறைமுகமாக தொடர்பில் இருந்துகொண்டு எடப்பாடிக்கு எதிராக செல்லூர் ராஜூ செயல்படுகிறாரா என ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளிக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal