மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என பேசுவது எல்லாம் பள்ளி குழந்தைகள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவதைப் போல..என பிரதமர் மோடி பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனை காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்தும் விமர்சித்தும் வருகின்றனர். அதேநேரத்தில் பாஜகவால் தனித்து பெரும்பான்மைக்கான 272 இடங்களைப் பெற முடியுமா? என்கிற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் முன் வைத்து வருகின்றனர்.

இதனிடையே இந்தியா டிவியின் தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் இந்தியா டிவி சேனல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

‘‘பாஜகவுக்கு 400 இடங்கள் என்பது மக்களின் ஆழ்மனங்களில் இருந்து வரும் முழக்கம். 2019&-2024 காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 400 இடங்களைப் பெற்றிருந்தோம். உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை 90 மார்க் எடுத்திருக்கிறது.. மற்றவர்கள் வெறும் 30-&40 மார்க் மட்டுமே எடுத்துள்ளனர். அப்படியான நிலையில் உங்கள் குழந்தைகளிடம் வெறும் 50 மார்க் எடுத்தால் போதுமா என்று சொல்வீர்கள்? எப்படியும் 95 மார்க் எடுத்தாக வேண்டும் என்றுதானே சொல்வீர்கள்?

அதே பாணியில்தான் பாஜக 400 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என நாங்கள் முழக்கமிடுவதும். அதாவது 400 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற இலக்கு வைத்து உழைக்க வேண்டும் என்பதற்காக அதனை சொல்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் 370 இடங்கள் பெறுவோம் என குறிப்பிடுகிறோம். ஏனெனில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கி நாட்டின் ஒற்றுமையை உருவாக்கியதைக் குறிப்பிடுவதாகும். பாஜக 370 இடங்களில் வெல்ல வேண்டும் என மக்கள் மனதில் பதிய வைக்கத்தான் நாங்கள் பிரசாரங்களில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறோம்’’ இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களில் ‘ஒரு வேளை இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால்…’ என அமித் ஷா பேசி வருகிறார். அதே சமயம் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. வெல்லும் என அடித்துக் கூறி வந்த மோடி திடீரென்று ‘ஜகா’ வாங்கியிருப்பதுதான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal