டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. முதல்வருக்கான பணிகளை கெஜ்ரிவால் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்டது. அதேசமயம், தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையில், இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடுமையான உடல்நலக் கவலைகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், 7 கிலோ எடை இழப்பு, கீட்டோன் அளவு உயர்வு,PET-CT ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஏற்கனவே முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனைகள் முக்கியமானவை எனவும், தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் 2ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து திகார் சிறைக்கு திரும்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal