ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிரிவலம் தொடங்கினார். 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் நடந்து சென்றார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ரோஜா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார். வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலையை நோக்கி மனமுருக வழிபாடு செய்தார். ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன். அண்ணாமலையார் ஆசியோடு மக்களுக்கு சேவைப் பணிகளை செய்து வருகிறேன்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனிடம் வேண்டிக் கொண்டேன். அண்ணாமலையார் அருளால் மீண்டும் அமைச்சராகி மக்கள் பணியாற்றுவேன் என்றார். கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.