ஸ்ரீநகரில் பதிவாகி இருக்கும் வாக்குப்பதிவின் விகிதம் ஜம்மு – காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை சரி தான் என்பதை வெளிக்காட்டுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், முந்தைய தேர்தலில் ஸ்ரீநகரில் 14% வாக்குகளே பதிவாகி இருந்த நிலையில், 4ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அது 37% ஆக உயர்ந்து இருப்பதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இது ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய 370வது பிரிவை 2019ல் ரத்து செய்த பாஜக அரசின் முடிவு சரி தான் என்பதற்கு உறுதியான சான்று என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஸ்ரீநகரில் வாக்குப்பதிவின் சதவீதம் ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளில் 40% அதிகமானோர் முதன்முறையாக வாக்களித்து இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி இம்முறை 40 இடங்களை கைப்பற்றுவது உறுதி என்று குறிப்பிட்டிருக்கும் அமித்ஷா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘4 கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 380 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மட்டும் 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 380 இடங்களில் இதுவரை நடந்த தேர்தலில் பிரதமர் மோடி ஏற்கனவே 270 இடங்களுடன் முழுப் பெரும்பான்மை பெற்றுள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal