விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். புகழேந்தி மறைவையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, விக்கிரவாண்டி சட்டப்பேரவைக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியானதையடுத்து, அந்த தொகுதிக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, அந்த வகையில், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது, விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூன் 1-ல் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்தவாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. தேதி வெளியிட்ட பின்னர் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.” என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என ஆருடம் தெரிவித்த ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

“பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இனியும் மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காலம் கடத்தாமல், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.” எனவும் ராமதாஸ் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா, போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal