பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய வேண்டும் அல்லது கைதாக வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தலைமறைவானார்.
இதற்கு நடுவே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர், ராஜேஸ் தாஸின் கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என வாதிட்டார். “காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதால், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கும் ராஜேஸ் தாஸ், தன்னால் பாதிக்கப்பட்டவரும் போலீஸ் உயரதிகாரி என்பதை மறந்துவிட்டாரா?“ என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேஷ் தாஸின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியதையும் அவர் ஏற்க மறுத்தார். இதனால் நீதிபதி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், சிபிசிஐடி அவரை கைது செய்ய நேரிடும். கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமெனில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.