‘‘நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது’’ என்று உ.பி.யில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் அலிகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: ‘‘ஒரு காலத்தில் அயோத்தி, வாராணசி என நாடு முழுவதும் வெடிகுண்டுகள் வெடித்தன. பாஜக ஆட்சிக் காலத்தில் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டு நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது. ஒட்டுமொத்த நாடும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை பிரிவினைவாதிகள் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி வந்தனர். நமது வீரர்கள் மீது அவர்கள் கல்லெறிந்தனர். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் காட்சிகள் முழுமையாக மாறியுள்ளன.

மத்திய அரசு சார்பில் 80 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. ஏழை குடும்பங் களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. ஏழை குடும் பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம்வரை மருத்துவ காப்பீடு வசதி கிடைக்கிறது.

ஆனால் ஊழல் கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதிக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. அந்த கட்சிகளின் தலைவர்கள் தங்கள் குடும்பங்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். ஹஜ்புனித பயணத்தில்கூட இரு கட்சிகளும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டன.

ஒரு காலத்தில் பணக்கார முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். சவுதி அரேபிய இளவரசரிடம் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரினேன். இதையேற்று இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை சவுதி அரேபியா அதிகரித்தது. இப்போது ஏழை முஸ்லிம்களும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் மனப்பான்மையுடன் காங்கிரஸ் செயல்படுகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யார் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர்? யாருக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கிறது? யாரிடம் எவ்வளவு ரொக்க பணம் இருக்கிறது? எத்தனை வீடுகள் இருக்கின்றன என்பன குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) கூறியிருக்கிறார். அரசே சொத்துகளை கையகப்படுத்தி அனைவருக்கும் பிரித்து வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெண்களின் தாலிச் செயின்கள் மீதும் கண் வைப்பார்கள். கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பங்கள் சொத்துகளை குவித்தன. தற்போது நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது. அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மக்களின் சொத்துகள், வீடுகள் அபகரிக்கப்படும். கொள்ளையடிப்பதை தங்களின் பிறப்புஉரிமையாக அந்த கட்சி கருது கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த ஏவுகணைகள் உத்தர பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் தற்போது தொழில்புரட்சி நடை பெற்று வருகிறது.

ஒட்டுமொத்த இந்தியர்களையும் நான் எனது குடும்பமாக கருதுகிறேன். குறு, சிறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி விளைச்சலை அதிகரிக்கவும் விற்பனை சந்தைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளது. ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அந்த கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் இந்தியர்களின் 500 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.

ராமர் கோயில் கட்டுவதை இண்டியா கூட்டணி தலைவர்கள் எதிர்த்தனர். கோயில் திறப்பு விழாவையும் புறக்கணித்தனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்’’இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal