பாராளுமன்ற  தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற  தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது.

சென்னையில் நாளை தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்கிறார் ஆளுநர் ரவி. வாக்குப்பதிவு நாளன்று, வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வாக்காளர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது ஓட்டுரிமையை தமிழகத்திற்கு மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்பவன் ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகர் திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (19.04.2024) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி, ஆகியோர் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து ஆளுநர் ரவி கருத்துகளை தெரிவித்து வருவதால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், ஆர்.என். ரவியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆளுநர் ரவியோ தனது வாக்குரிமையையே தமிழ்நாட்டுக்கு மாற்றி உள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி வாக்களிக்க உள்ள தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயவர்தன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal