பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் போட்டி போடுகிறார். பா.ஜ.க. சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பெரம்பலூர், கரூர், திருச்சி, ஆகிய 3 மாவட்டங்களின் 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு முத்தரையர்கள் முதன்மை வாக்காளர்கள். தலித்துகள், ரெட்டியார்கள், உடையார்கள், யாதவர்கள், நாயுடு, வன்னியர், எஸ்டி கணிசமான வாக்காளர்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பெரம்பலூர்.

திமுக 7 முறை, அதிமுக 6 முறை, காங்கிரஸ் 2 முறை வென்ற தொகுதி. இம்முறை தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் நேற்று இரவே பட்டுவாடாவை முடித்துவிட்டார்கள். அதாவது ஓட்டுக்கு 500 கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க.வினரைத் தாண்டியும், அ.தி.மு.க.வினருக்கும் சிறப்பாக அருண் நேரு தரப்பில் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஐ.ஜே.கே. வேட்பாளர் இன்று விட்டமின் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க. தலைமை ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என கறாராகச் சொல்லிவிட்டது.

ஆனாலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்.டி.சந்திரமேகன் அசரவில்லை. பெரம்பலூர் நடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் முத்தரையர் சமுதாயத்தினர்தான். அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி.சந்திரமேகன். முத்தரையர் சமுதாய வாக்குகள் தன்னை எப்படியும் வெற்றி பெற வைத்துவிடும் என்று உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார் சந்திரமோகன்.

ஆனால், முத்தரையர் சமுதாயத்தினருக்கும் அமைச்சர் கே.என்.நேரு சார்பில் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தளவில் முத்தரையர் சமுதாயத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் எப்போதுமே முத்தரையர் சமுதாயத்திற்கு அங்கீகாரம் கொடுத்துவிடுவார்கள்.

அப்படி முத்தரையர் சமுதாயத்திற்கு அங்கீகாரம் கொடுத்த வேட்பாளர் என்.டி.சந்திர மோகனை முத்தரைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த முத்தரையர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

ஜூன் 4ம் தேதி வெல்லப் போவது பணமா..? பந்தமா..? என்பது தெரிந்துவிடும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal