திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த செயலாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது,”இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் இனிமேல் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது என்றும், அதற்காக வீட்டில் உள்ளவர்களுக்கு தங்கத்தின் பெயரில் தங்கராசு, தங்கம், பெண்களுக்கு பவுனு.. பவுனுதாய் என பெயர்தான் வைக்க முடியும். மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாயாக விலை உயர வாய்ப்புள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த முடியாது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தினந்தோறும் மக்களை காப்பாற்ற அதிமுக கூட்டணியான எஸ்.டி.பி.ஐ கட்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் முகமது முபாரக் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார். இதில் அதிமுக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal