தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலாகட்டும், நாடாளுமன்றத் தேர்தலாகட்டும் எதுவந்தாலும் பிரச்சாரங்கள், வியூகங்கள் என களைகட்ட ஆரம்பித்துவிடும். அதே சமயம், வேட்பாளருக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியினரே மறைமுகமாக உள்ளடி வேலை பார்ப்பார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. என இருபெரும் திராவிட கட்சிகளிலும் இந்த உள்ளடி வேலைகள் அதிகம் நடக்கும். தற்போது திருச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே மறைமுகமாக உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது பற்றி திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், திருச்சி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவிற்கு தி.மு.க.வினர் முழுமனதுடன் வேலை பார்க்கவில்லை. காரணம், ‘நான் செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன்!’ என்று துரை வைகோ சொன்னது தி.மு.க.வினரின் மனதில் காயத்தை ஏற்படுத்தி விட்டது.

அதே சமயம், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தீவிரமாக களப்பணியில் இறங்கி வாக்குசேகரித்து வருகிறார். திருச்சி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன் என்றெல்லாம் பொதுமக்களிடம் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். அதே சமயம், அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் பட்சத்திலும், அவருக்கு எதிராக உள்ளடி வேலைகளும் மறைமுகமாக நடக்கிறது.

திடீரென்று ஒருவரை திருச்சி எம்.பி. ஆக்க, ஏற்கனவே அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு மனம் வரவில்லை. இதனால் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது. இந்தத் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றிருக்கிறது. உடனடியாக எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளிடம், ‘கருப்பையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு’ என்று எச்சரிக்கை தொனியில் பேசியிருக்கிறார்.

எனவே, திருச்சி அ.தி.மு.க.வில் உள்குத்து நடக்காமல் வேலை பார்த்தால், அ.தி.மு.க. வேட்பாளர் கரைசேர்வார் என்பதுதான் தற்போதைய களநிலவரமாக இருக்கிறது’’ என்றனர்.

திருச்சியில் மட்டுமல்ல தமிழகத்தில் பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினரே உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க எடப்பாடி பழனிசாமி ‘ஜெ. பானியை கையில் எடுக்க வேண்டும்’ என்று எதிர்பார்க்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal