மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக-வால் இங்கு காலூன்ற முடியாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பா.ஜ.க. பொறுத்தவரை பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டார். இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7-வது முறையாக இன்று தமிழகம் வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை வருவது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ‘மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக-வால் இங்கு காலூன்ற முடியாது. பாஜக ஆட்சி நீடிக்க கூடாது; அப்படி நீடித்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்.

மேலும், நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை எழுந்துள்ளதால் மோடி நிதானம் தவறி, பொய் பேசி வருகிறார். வடமாநிலங்களில் பாஜகவிற்கு படு தோல்வி ஏற்படும் அதனால் தான் மோடி நிதானம் இழந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சி என்று மோடி சொல்லுகிறார்; இன்று ஊழல் கட்சியே பாஜக தான். சென்னை வரும் பிரதமர், நயினார் நாகேந்திரனிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும்’, என்று அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal