நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான மற்றும் கூடுதலான இடங்களைப் பெறும் என தெரிவித்துள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் 8 முதல் 12 சதவிகித வாக்குகளை பெறும் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மறு பக்கம் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கருத்து கணிப்பும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. கருத்து கணிப்பு பாஜகவிற்கு சாதகமாகவே தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதனை இந்தியா கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊடகங்களை பாஜக விலைக்கு வாங்கி விட்டதாகவும், தேர்தலில் பாஜகவிற்கு ஷாக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அமேதியில் போட்டியிடாமல் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கேரளாவை வெல்வதன் மூலம் எதிர்க்கட்சியால் நாட்டை வெல்ல முடியாது.

உத்தரபிரதேசம், பீஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறாமல், வயநாட்டில் வெற்றி பெற்றால் எந்தப் பலனும் இல்லையென தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான, கூடுதலான இடங்களைப் பெறும் என கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு 8 முதல் 12% வாக்குகள் கிடைக்கும் என்கிற வகையில் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தேன். எனவே இந்த முறை தமிழ்நாட்டில் முதல் முறையாக பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதத்தைப் பெறக் கூடும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முதல் அல்லது 2-வது இடத்துக்கு வரும் எனவும், ஒடிஷாவில் பாஜக முதல் இடத்தில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலும் கூட பாஜகதான் முதலிடத்தில் இருக்கும் என கூறியுள்ளார். 300க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு எத்தனை முறை சுற்றுப்பயணம் செய்தார் என்பதை ராகுல், சோனியா மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் யோசித்து பாருங்கள் என தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal