பிரபல டிவி சேனலில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து செய்தி வாசிப்பாளரும் பாஜக நிர்வாகியுமான சவுதாமணி வேதனையுடன் பேட்டி அளித்திருக்கிறார்.

பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சவுதாமணி. இவர் ஆசிரியை, தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என பன்முகங்களை கொண்டவர். இவர் கேரளத்தை சேர்ந்தவர்.

சவுதாமணி வளர்ந்தது கன்னியாகுமரியில்! இவர் அண்மையில் கூட கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘‘என்னுடைய கணவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு இறந்தார். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களை வெளிநாட்டில் படிக்க வைத்தேன். எனது கணவர் இறந்த பிறகு நான் வேலை பார்த்த இடத்தில் என்னை மறுமணம் செய்து கொள்ள என்னிடம் சில கேட்டனர். ஆனால் எனக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமே இல்லை.

காரணம் யார் என்னுடைய வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் என்னுடைய மகள்களை அவர்களுடைய குழந்தைகளாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு நமக்கு எந்த உத்தரவாதமும் கிடைக்காது. ஆரம்பத்தில் ஓகே சொன்னாலும் பின்னாளில் பிரச்சினைகள் வரும். இதனால் நான் இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை. குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்துவிட்டேன். என் கணவர் இறந்ததும் வழக்கம் போல் செய்தி வாசிப்பு பணிக்காக ஒரு சேனலுக்கு சென்றேன்.

அங்கு வழக்கத்திற்கு மாறாக செய்திகள் வாசிப்பதற்கான எண்ணிக்கைகள் எனக்கு குறைவாகவே ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து எனது ஹெட்டிடம் கேட்டேன். அதற்கு அவர் “நீதான் என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறியே” என ஒரு மாதிரியாக பேசினார். இதையடுத்து என்னை போனில் அழைத்து , “உன் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனது செலவையும் நான் கவனித்துக் கொள்கிறேன்” என பேசினார்.

அந்த நபர் எனக்கு மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றிய மற்ற பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருந்தார். அவர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் நான் ஒரு மாதத்திலேயே வேலையை விட்டுவிட்டேன்’’ இவ்வாறு சவுதாமணி வேதனையுடன் பகிர்ந்தார்.

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சௌதாமணியை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal