தமிழகத்தில் நடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீயாய் இறங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா சென்னையில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 40 தொகுதிகளிலும் அதிமுக, தேமுதிக மற்றும் மற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் பிரேமலதா.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியை ஆதரித்து பிரேமலதா வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி பகுதியில் பிரச்சாரம் செய்த பிரேமலதா, துளசி கூட வாசம் மாறும், நமது தவசி வாசம் மாறாது என்றார். கேப்டன் விஜயகாந்த் அன்னதான பிரபுவாகவே வாழ்ந்தவர் என்றும் மக்கள் மனதில் எப்போதும் வாழ்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும் கூறினார். தொடர்ந்து பெண் குழந்தை ஒன்றுக்கு பெயரிட்டார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பெயரையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரையும் சேர்த்து விஜயஜெயா என குழந்தைக்கு பெயர் சூட்டினார் பிரேமலதா.
இதனை பார்த்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா மீது பிரேமலதாவுக்கு இவ்வளவு பாசமா என கேட்டு வருகின்றனர். முன்னதாக கூட்டணிக்கு நிர்பந்தித்த பாஜக, தங்களின் வங்கிக்கணக்குகளை முடக்கி மிரட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.