தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தோலுரித்து தொங்கவிட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் ஆனால், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் தம்மிடம் இல்லை என்பதால் தான் போட்டியிடவில்லை என்று நட்டாவிடம் கூறிவிட்டதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறியதாவது: ‘தேர்தலில் நிற்பதற்கு பணம் தான் முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட சொல்லாத ஒரு ‘அருமையான’ கருத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து, தனது சொந்தக் கட்சியை அம்பலப்படுத்தியுள்ளார். பணம் இல்லாத காரணத்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது நிர்மலாவின் முதல் கருத்து. அப்படியென்றால் கேரண்டி, கேரண்டி என்று விளம்பரங்களில் கூவிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் உத்தரவாதம் நாட்டின் நிதியமைச்சரைகூட சென்றடையவில்லை என்பதுதானே உண்மை. நாட்டுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அளவுக்கு எதையும் மோடி அரசு செய்யவில்லை; ஆனால் பணம் இருந்தால் தான் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நிலையைத் தான் அரசு உருவாக்கியுள்ளது.

தேர்தலில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார் என்றால், தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக திரட்டிய 8,500 கோடி ரூபாய் எங்கே போனது? தொழிலதிபர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் சட்ட விரோதமான முறையில் பெறப்பட்ட அந்த பணம் பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு போதாதா? தேர்தலில் போட்டியிட ஒருநாட்டின் நிதியமைச்சருக்கே பணம் இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நிலை என்ன? தேர்தலுக்கான செலவை அரசே ஏற்கவேண்டும் என்ற எங்களது நீண்ட கால கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை? நிதியமைச்சரிடமே பணம் இல்லை என்றால் தொழிலாளி, விவசாயிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். எது எப்படியிருந்தாலும் இந்தியாவின் தற்போதைய கவலைக்குரிய நிலைமையை நிர்மலா சீதாராமன் அம்பலப்படுத்தி விட்டார்’. இவ்வாறு பிருந்தாகாரத் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal