மக்களவை தேர்தலில் பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டசபை தேர்தலின் போதும் விசிக கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. இதனை காரணமாக காட்டி குறைந்தபட்சம் இரண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட சின்னத்தை கொடுக்க வேண்டும் என விசிக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் முறையிட்டும் பதில் கிடைக்காத நிலையில் வி.சி.க தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றே(நேற்று) தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கடந்த தேர்தல்களில் மாநிலத்தில் விசிக ஒரு சதவீதம் அளவிற்கு கூட ஓட்டு வாங்கவில்லை.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் நிதி ஆண்டு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை எனவே வி.சி.கவுக்கு பானை சின்னம் தர முடியாது’’ என்று தெரிவித்துள்ளது.இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டு மேல்முறையீடு செய்துள்ளது விசிக. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.