கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், கோவையில் உள்ள ஒரு கடையில் அந்த சூட்கேசை திருவாரூர் பரவக்கோட்டையை சேர்ந்த நடராஜன் (32) வாங்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுதொடர்பாக நடராஜன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். நடராஜன் பிரான்சில் இருந்தபோது மேட்ரிமோனியில் தனது விவரத்தை பதிவு செய்து திருமணத்திற்கு வரன் தேடியபோது, கத்தாரில் உள்ள கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தேனியை சேர்ந்த சுபலட்சுமியும் தனக்கு திருமணமாகி கணவரை பிரிந்திருப்பதாக கூறி திருமண வரனுக்கு பதிவு செய்துள்ளார். இருவருக்கும் மேட்ரிமோனி மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதை அடுத்து இருவரும் இந்தியா திரும்பினர்.

தனது வீட்டிற்கு சென்ற சுபலட்சுமி, கணவரிடம் தகராறு செய்து 2 குழந்தைகளையும் விட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பிறகு கோவை பீளமேட்டிற்கு சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நடராஜனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தியுள்ளனர். கடந்தாண்டு இறுதியில், நடராஜன் பரவக்கோட்டைக்கு சென்று தனது மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் கோவை வந்து சுபலட்சுமியுடன் வாழ்ந்துள்ளார். அப்போது நடராஜன் ஏற்கனவே திருமணமான விவரம் சுபலட்சமிக்கு தெரியவந்தது.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நடராஜன், சுபலட்சுமியை இரும்பு கம்பியால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சுபலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து நடராஜன் தனது உறவினரான கனிவளவன் என்பவர் உதவியுடன் கோவையில் சூட்கேசை வாங்கி அதில் சுபலட்சுமியின் உடலை அடைத்து ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஏற்காட்டிற்கு வந்து சூட்கேசை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நடராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கனிவளவனை போலீசார் கைது செய்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal