அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பும் அமலாக்கத் துறை தரப்பும் ஆஜராகாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

2001- 2006ஆம் ஆண்டு அதிமுகவில் வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது திமுகவில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.90 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாபன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த 14.5.2001 முதல் 31.3.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ 6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை மனு செய்தது. இதனால் இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்தது. இந்த நிலையில் இந்த சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றதால் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கை விசாரணை நடத்தினார்.

அன்றைய தினம் அனிதா ராதாகிருஷ்ணனும் அமலாக்கத் துறையும் கோர்ட்டுக்கு வராததால் மார்ச் 22 ஆம் தேதிக்கு நீதிபதி (பொறுப்பு) உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal