தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாகா மற்றும் ஓபிஎஸ் அணி கேட்கும் தொகுதிகளை தர மறுப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துவிட்டது. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதர கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.
அதிமுக, பாஜக ஆகியவை தலைமையில் தனித்தனி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளன. அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 33 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா, ஓபிஎஸ், அமமுக மற்றும் சிறிய கட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. ஆனால் பாமக, தமாகா, ஓபிஎஸ் அணி கேட்கும் சில தொகுதிகளை பாஜக தர முடியாமல் அடம் பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்கிறது பாமக. ஆனால் இதனை ஏற்க மறுக்கிறது பாஜக. அத்துடன் மயிலாடுதுறை தொகுதியை தங்களுக்கே தர வேண்டும் என்கிறதாம் தமாகா. அதேபோல தஞ்சாவூர் தொகுதியையும் தமாகா கேட்கிறது. ஆனால் இந்த இரு தொகுதிகளையும் தமாகாவுக்கு தர மறுக்கிறதாம் பாஜக.
ஓபிஎஸ் அணியும் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்கிறதாம். இந்த இரு தொகுதிகளையும் தர முடியாது என கைவிரித்துவிட்டதாம் பாஜக. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜகவை நம்பி கூட்டணிக்குப் போன பாமக, தமாகா, ஓபிஎஸ் அணி இப்போது கேட்கிற தொகுதிகளைப் பெற முடியாமல் அதிருப்தியில் உள்ளனவாம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்த 3 கட்சிகளும் கடும் நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.