இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் இவரது கட்சி மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி தரும்படி நடிகர் மன்சூர் அலிகான் கேட்டுக்கொண்டார். ஆனால் அதிமுக தரப்பில் சீட் கொடுக்க முடியாது எனவும் ஆதரவு தெரிவிக்கும்படி அதிமுக தரப்பில் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது. அந்த செயற்குழு கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இனிமேல் பொதுச்செயலாளர் தலைமையில் கட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கூறுகையில்: தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டார். அவர் கட்சியின் தொண்டராக மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal