திமுக கூட்டணியில் இன்னும் வைகோவின் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட 7 இடங்களை மீண்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் கடந்த முறை காங்கிரஸ் வென்ற திருச்சி, கரூர் தொகுதிகளுக்கு பதில் வேறு 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது.

அதன்படி திருச்சிக்கு பதில் மயிலாடுதுறையும், கரூருக்கு பதில் ஈரோடு தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திமுக முடிவு செய்துள்ளதாம். தமிகத்தில் இந்த 9 தொகுதிகள் தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறிக்கப்படும் திருச்சி லோக்சபா தொகுதி வரும் தேர்தலில் வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அதேபோல் கரூரில் திமுகவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ள திருநாவுக்கரசர் (திருச்சி தொகுதி), ஜோதிமணி (கரூர் தொகுதி) ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal