தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா சூரியச்சுடர் 49வது நிகழ்வாக “நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்திற்கு ஒளி!” என்ற தலைப்பில் கொளத்தூர் பெரியார் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக சட்டத்துறை துணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்துரு தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.இந்த பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது;

இந்திய திருநாட்டில் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத மக்கள் முதல்வர் இருக்கிறார் என்றால் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். திராவிட இயக்கம் என்று வந்தால் எல்லோரும் அடங்கி போய்விட மாட்டார்கள். கடவுளையும் பாதுகாப்பது திராவிட இயக்கம்தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். கொள்ளையடிக்கிறார்கள் என்று இங்குவந்து பிரதமர் பேசுகிறார். ஆம், ஏழை, எளிய மக்களின் இதயங்களை கொள்ளையடித்து கொண்டுதான் இருக்கிறோம்.

இன்றுதான் 1967ல் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நாள். ஒன்றியத்துக்கும் சேர்த்து கலைஞர் வழிகாட்டினார். எதிர்ப்பு வரும் போது தான் இந்த இயக்கத்துக்கு இளமை வரும். திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள். திமுக இயக்கம் காணாமல் போனதில்லை. பதவி போவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை, கொள்கை என்பது மிக முக்கியம். அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் திராவிட மாடல் அரசு.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதற்கு மிக முக்கிய காரணம் ஸ்டாலின். 40க்கு40 என்பதற்கு தமிழ்நாடு ஆயத்தமாகிவிட்டது. தென் நாட்டிலேயே காவிகளுக்கு கதவு சாத்தப்பட்டுள்ளது. பணத்தை கொண்டு வந்து வாரி இறைத்தாலும் அனுமதிக்க தயாராக இல்லை. வடபுறத்திலும் இப்போது பாஜகவிற்கு எதிர்ப்பு வந்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதை விட யார் வர வேண்டாம் என்பதிலே தெளிவாக இருக்கிறோம். திராவிடம் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வர முடியாது.

140 கோடி மக்களை உங்கள் குடும்பமாக நினைத்திருந்தால், தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்தபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார். பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வாருங்கள். அண்ணாமலை உங்கள் வாக்கை குறைத்ததை விட நீங்கள் வந்து கூடுதலாக குறைக்கிறீர்கள். திராவிடமும் மனிதநேயமும் பிரிக்க முடியாதது.இவ்வாறு பேசினார்.

பொதுக்கூட்டத்தில், முன்னாள் நீதிபதிகள் கே.என்.பாஷா, ஜிஎம்.அக்பர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கலாநிதி வீராசாமி எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ் குமார், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராசன், மண்டல குழு தலைவர்கள் சரிதா, கூ.பி.ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal