கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்தை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இதுதான் தி.மு.க.வில் உள்ள மகளிர் நிர்வாகிகளை கொதிப்படைய வைத்திருக்கிறது.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், 2006 ல் உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை வார்டு 25 ல் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர் விஜிலா சந்த்தியானந்த். 2011 அதிமுக மேயர், 2014 ல் அதிமுக ராஜ்யசபா எம்பி, அதிமுக மாநில மகளிரணி செயலாளர் என அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர்.

பின்னர், ஜெ.மறைவுக்கு பின் அதிமுகவிலிருந்து அமமுகவிற்கு சென்று பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து, திமுக ஆட்சிக்கு வந்தபின் 2021 செப்டம்பரில் விஜிலா சத்தியானந்த் தி.மு.க.வில் இணைந்தார்.

மாநில தொண்டரணி துணை செயலாளராக திமுகவில் பதவி வகிக்கும் விஜிலா ஆனந்துக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட இரு வாரியங்களில் ஒன்று காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸுக்கும், மற்றொன்று ‘எனக்கு மாநில மகளிரணி தலைவி பதவி கொடுத்தால் அதிமுகவுக்கு வந்து விடுகிறேன்’ என்று ஆறு மாதத்திற்கு முன்பு சொன்னதாக கேள்விபட்ட அதிமுக பாரம்பரிய விஜிலா சத்தியானந்துக்கு மற்றொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

‘மாற்றங்களை தர நினைக்கும் சின்னவரே…’ திமுகவில் கிறித்தவ மதத்தை சேர்ந்த பாரம்பரிய கட்சிக்காரர்கள் இல்லையா? தி.மு.க.வில் காலம் காலமாக, வாழையடி வாழையாக இருக்கும் மகளிர் இல்லையா? என்ற கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனியாவது, தி.மு.க.வில் உள்ள மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்’’ என நம்மிடம் கிசுகிசுத்தனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal