தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சென்னையில் ஒருங்கிணைந்த 9 மாவட்டங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்தது. தலைமை கழக நிர்வாகிகள் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
மாவட்ட செயாளர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுவதால் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், ஆட்டோக்களில் வந்த தொண்டர்கள் போதைப் பொருளை தடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து கோஷமிட்டனர்.